பெண்கள் உரிமைக்குத் தேவை அமைதி

Posted on

சரோஜா சிவசந்திரன்
போர்ப் பண்பாட்டிலிருந்து ஓர் அமைதிப் பண்பாட்டுக்கு மாற வேண்டிய அவசர தேவை இன்றுள்ளது. மனித மேம்பாடு, அமைதி, மக்களாட்சி ஆகிய மூ ன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்த, ஒன்றை உறுதிப்படுத்தும் கூறுகள். இவையின்றி மனித மேம்பாடு குறிப்பாக பெண்கள் மேம்பாடு என்பது இன்று கேள்விக் குறியாகவே உள்ளது. உலகெங்கும் போர் நடைபெற்று, ஏன் அமைதி காணப்பட்ட நாடுகளில் கூட பெண்கள் சொல்லொணா துயரங்களும், துன்பங்களும் தொடர்வது அறியப்படுகின்றது. அதிகரித்துவரும் வன்முறைப் போக்குகள் பெண்களின் முன்னேற்றத்தின் முக்கிய தடைக் கற்களாக, அவர்கள் உடல், உளநல மேம்பாட்டைத் தாக்குகின்றன. உலகெங்கும் வன்முறை பற்றி, அமைதிப் பேச்சுக்கள் பற்றி ஆராய்ச்சிகள், அடுக்கடுக்காக நூல்கள், கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இவைகள் யாருக்கு உதவப் போகின்றன? வன்முறைகளுக்கு அதிகம் உள்ளாகும் பெண்களின் பொறுப்பான பங்கு இங்கு எங்கே உள்ளது?
வன்முறைகளுக்கு அஞ்சி, ஒதுங்கி ஒளித்து வாழும் பெண்களின் மனப்பாங்கில் தீவிர மாற்றங்கள் தேவை, வன்முறைகள் நடந்த பின்பு போர்க் கொடி தூக்குவதில் மட்டுமே எமது சமுதாயம்  கவனம் செலுத்துகின்றது. இவற்றை வராது தடுத்து, வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பெண்கள் இன்று தயாராக இல்லை. எமது பிரச்சினைகளை முன்வைத்து எத்தனை போராட்டங்கள் எமது மண்ணில் நடந்துள்ளன?
நடக்கும் வன்முறைகளை எப்படியாவது சமூகத்தின் பார்வையில் எட்டாது மறைத்து, ஒளித்து விடவேண்டும் என்று பாடுபடுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் எமக்கு உரிமைகள் எங்கே?
அல்லல்படும் சமுதாயத்தில் வன்முறைகளைக் கைவிடுவதற்கு சமுதாயம் முழுவதும் ஒரு கடமைப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இவை அரசாங்கப் பொறுப்புக்கள் அல்ல மாறாக நாட்டின் பொறுப்புக்கள் ஆகும்.
ஒரு போர்ப் பண்பாட்டிலிருந்து ஓர் அமைதிப் பண்பாட்டிற்கு மாறுவது என்பது கடினமான செயல். இதற்கு நாட்டில் ஒவ்வொருவரது ஒத்துழைப்பும் தேவை. பெண்கள் அனுபவித்து வரும் துயரங்கள், வன்முறைகளில் ஆண்களுக்குப் பங்கில்லை என்று தட்டிக் கழித்து விட முடியாது. ஒரு மாற்றம் தேவையாயின் அம்மாற்றத்தை ஏற்படுத்த ஒவ்வொருவரும் தேவை.
பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான நிறுவனங்கள் கூட படிப்படியாக அமைதிக்கான, அமைதியை நிலைநாட்டும் நிறுவனங்களாக மாற்றப்பட வேண்டும். குழப்பங்கள், பூசல்கள் வருமுன் தடுப்பது சாலச்சிறந்தது. இந்தத் தடுப்பத் தான் நமக்கு வெற்றியை அளிப்பது. இந்த வெற்றியிலேயே மனிதனின் தனித்தன்மையான அறிவுத் திறன்கள் வெளிப்படுகின்றன. அளவு கோலும் அதுவே.
நாம் செய்தி ஊடகங்களில் வாசிக்கும், கேட்கும் நிகழ்வுகள் கூட இன்று ஆரோக்கியமானதாக இல்லை. அமைதி, ஆரோக்கியம் இயல்பு நிலை ஆகியவை செய்திகள் ஆவதில்லை. கண்ணுக்குப் புலனாகாத இந்தச் செய்திகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க முயலு வேண்டும்.
துயரத்தை எதிர் கொண்டு போரினால்க் கழைப்படைந்த மக்கள் இன்று அமைதியில் நாட்டம்  கொண்டுள்ளனர். போரில் ஈடுபட்டுள்ள பகுதியினர் கூட அமைதி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். உலக நாடுகளில குறிப்பாக தென்னாபிரிக்கா, நமீபியா, அங்கோலா, எல்சல்வடோர், மொஸாம்பிக் போன்ற நாடுகளில் ஏற்கப்பட்ட அமைதி உடன்படிக்கைகள் எமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ள போதிலும், போரின் காரணமாக உயிரிழந்த, பலியான உயிர்கள், சீர் குலைந்த குடு்ம்பத்தினர், மானபங்கப்படுத்தப்பட்ட பெண்கள், அகதி வாழ்வில் அல்லலுறும் பெண்கள் இவர்களை நிகைக்கும் போது அமைதியில் ஆழமான உயர்வுகள் சூழ்ந்து விடுவது உண்மை. இச் சிந்தனைகட்கு நாம் புத்துயிர் அளிக்கப் பாடுபட வேண்டியது இன்றைய தேவையாகும். இன்று பெண்கள் அமைப்புக்கள் விழிப்புடன் செயற்படுவதற்கான நேரம் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள், சிறுமிகள் எண்ணிக்கைகளைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. பட்டினியால் வாழும் குடும்பங்களுக்காக நம் மனம் கொதித்தால் மட்டும் போதாது. நாம் ஒவ்வொருவரும் இயன்ற அளவிற்கு செயற்பட வேண்டும். சமூகம் பெண்களுக்கான மேம்பாட்டு முன்மாதிரிகளையும், வாழ்க்கை முன்மாதிரிகளையும் திணிப்பதை நிறுத்த வேண்டும். இத்திணிப்புக்கள் வாழ்விற்கான உரிமைகளைத் தூக்கி எறிந்து விடுகின்றனர். உலகமயமாதல் மூலம் நாடுகளின் தனித்துவம் பேணப்படுவதில் ஏற்படக் கூடிய ஓர் சீர்மையாக்க அபாயத்தைத் தவிர்த்துக் கொள்வதில் பல யுக்திகளை நாடுகள் பேண முயல்கின்றன. இதற்காக சமய பண்பாட்டு, தேசிய கொள்கைகளிடம் அடைக்கலம் தேட முயல்கின்றன. இதனால் ஏற்படும் உட்பூசல்களைப் எதிர் நோக்கும் நாம், மாறிவரும் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு செயற்படுவதில் ஆர்வம் காட்டுவது தேவையாகின்றது.
மனித உரிமைகளை இப் புதிய நூற்றாண்டின் விடியலில் நாம் நடைமுறையில் செயற்படுத்த வேண்டிய சூழ்நிலையை வலுப்படுத்துவதற்கு ஆவன செய்ய முயலவேண்டும்.  மனித உரிமைகள், பெண்கள் உரிமைகளுக்கு எந்த நிறுவனமும், தனி மனிதரும் தனி உரிமை கொண்டாட முடியாது. இது பற்றிய மற்றவர்களின் தகுதிகளைக் கெடுக்கவும் முடியாது. அவற்றை அரும்பாடு பட்டுப் பெற வேண்டும். நாள்தோறும் புதுப்பிக்க வேண்டும். இச் செயற்பாடுகளின் புதிய அணுகுமுறையில் பெண்கள் அமைதியான வாழ்வும் உறுதிப்படுத்தப் படுகின்றன. அமைதி உணர்வு ஓர் நாளில் வந்து வடுவதில்லை. அதனை ஆணைமூலம் திணிக்கவும் முடியாது. சிந்தனை, சுதந்திரம், செயல், கபடமின்மை போன்ற ஒறுதிப்பாடுகள் வலுப்படுத்துவனவாக அமையும். வன்முறைப் போக்கின் இழிநிலையிலிருநந்து விடுபடும் நிலைக்கு வழிகாட்டியாகப் போரின் கொடூரத்தைப் போக்கும் அமைதி நிலையை அடையப் பெண்கள் உறதியுடன் செயற்பட முனைவது அவசிய தேவையாகும்.

Leave a Reply