சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான வன்முறைகளை ஒழிப்பதற்கு அவர்கள் சமுதாயத்தில் ஆளுமை உடையவர்களாக தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதனடிப்படையில் மகளிர் அபிவிருத்தி நிலையம் பெண்களுக்கான பல செயற்பாடுகளை நிறைவேற்றி வருகின்றது. இவற்றில் ஒரு கட்டமாக தேசிய மொழிகள் மற்றும், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு, ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நெடுந்தீவுப் பிரதேசத்தில் பெண்களுக்கான ஓர் செயற்பாட்டுத் திட்டத்தை மகளிர் அபிவிருத்தி நிலையம் இவ்வாண்டு ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றது.
நெடுந்தீவு தனிப்பட்ட ஓர் தீவாக பல அபிவிருத்தியின் பின்னடைவுகளை சந்தித்த போதிலும் குடாநாட்டின் பொருளாதார சமூக இணைவுகளுடன் தொடர்புகளை பேணி வருகின்றது. ஆயினும் இங்கு வாழும் பெண்களது சமூக இணைவு ஒடுக்கப்பட்டதாகவும் பின்தங்கிய நிலையிலும் காணப்படுவது குறைபாடே.
மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாடு, கடல்கடந்து இப்பிரதேச மக்களை குறிப்பாக பெண்களை அணுகியிருப்பது, அவர்களது வாழ்வியலில் சமூக மட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இப் பிரதேச மக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல நிகழ்ச்சித் திட்டங்கள் பல கட்டங்களில் இங்குள்ள பெண்களுக்காக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக பாலியல் பலாத்காரங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இவை தொடர்பான சட்டங்களை அவர்கள் அறிந்திருத்தல் அவசியம். ஆகவே வீட்டு வன்முறை தொடர்பான சட்ட விளக்கங்களை அங்குள்ள தெரிவு செய்யப்பட்ட பெண்கள், ஆண்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பிரதேசசெயலக அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்குவதற்காக ஓர் தொடர் விளக்கக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
இவ்வாறான ஒவ்வோர் நிகழ்விலும் ஒவ்வொரு 10 பேர் கொண்ட நான்கு பெண்கள் குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் மேற்கொண்டு எடுக்க வேண்டிய செயற்பாடுகள் விரிவாக அவர்களுக்குக் கூறப்பட்டன.
நெடுந்தீவிலிருந்து இந்தியாவிற்கு வள்ளங்களில் செல்லக் கூடிய இலகுவான வாய்ப்புக்கள் காணப்பட்டதன் காரணமாக யுத்த காலங்களில் இத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் இந்தியாவிற்குச் சென்றிருந்தன. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பல குடும்பங்கள் இலங்கைக்குத் திரும்பி வந்துள்ளதனால் பெரும்பாலான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடமான நெடுந்தீவுக்கு வந்துள்ளமை அவதானிக்க முடிந்தது.
இச் செயற்பாடுகளோடு பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு உள வள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டிய தேவையும் இங்கு இனங்காணப்பட்டுள்ள நிலையில் மகளிர் அபிவிருத்தி நிலையம் ஜுன் 29ம் திகதி ஒர் உளவள ஆலோசனைக் கருத்தரங்கை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்காக நடத்தியது. இக் கருத்தரங்கை நடத்துவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து உளவள ஆலோசகர் வருகை தந்து ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவிற்கும் வருகை தந்து சேவையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. உளவள சேவையில் மேலதிக கவனத் தேவைப்பாடுடையவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதான செயற்பாடாக ஜுலை 11ம் திகதி இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்று மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்டுள்ளது. இச் சட்ட சேவை முகாமில் பங்கு கொள்வதற்காக யாழ்.குடாநாட்டிலிருந்து நான்கு சட்டத்தரணிகளும், பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ் வழங்கல் தொடர்டபாக யாழ்.மாவட்ட செயலக உதவிப் பதிவாளர், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இச் சட்ட முகாமில் கலந்து சட்ட சேவைகளை வழங்கினர். இதன்போது நெடுந்தீவுப் பிரதேசத்தின் J/03இ J/04இ J/05இ J/06 கிராமசேவகர் பிரிவிலுள்ள மக்களுக்காக இச் சேவைகளை வழங்கின. இதன் போது 19 பேரிற்கு அடையாள அட்டைகள், 19 பேரிற்கு பிறப்புச் சான்றிதழ், 5 பேரிற்கு திருமணச் சான்றிதழ், 4 பேரிற்கு இறப்புப் பதிவுகளும் மேற்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓர் இளம் தம்பதியினருக்கு உடனடியான திருமணப் பதிவும் அப்போது இடம் பெற்றது. இச் சேவையில் திருப்தியடைந்த மக்கள் மேலும் இவ்வாறான தேவைகள் உள்ளவர்கள் இருப்பதாகவும், தொடர்ந்தும் இச் சேவையை ஒழுங்குபடுத்துமாறும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தினரிடம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மேலும் இரு கிராம சேவையாளர் பிரிவுக்கும் இலவச சட்ட சேவை முகாம் ஒன்றை நடத்துவதற்கும், ஒழுங்கு செய்யப்பட்ட 40 பெண்களை உள்ளடக்கிய நான்கு மகளிர் குழுக்களுக்கும், பெண் தலைமைத்துவப் பயிற்சியையும் வழங்குவதற்கு மகளிர் அபவிருத்தி நிலையம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இச் சேவை ஒழுங்காக நடைபெறுவதை மேலும் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து மகளிர் அபிவிருத்த நிலையம் கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளது. கண்காணிப்பு செய்யப்பட்ட அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற அறிக்ககைள் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தினருக்கும், மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
நெடுந்தீவுக் கடற்பிரயாண வசதிகள் கஸ்டம் நிறைந்த ஒன்றாக இருந்த போதிலும் இப் பிரதேசத்தின் தேவை கருதி யாழ்.குடாநாட்டிலிருந்து பல வளவாளர்கள் சிரமத்தையும் பாராமல் வருகை தந்து தமது சேவையை ஆற்றியமை வரவேற்கத்தக்கது.
பெண்கள் எக்கோணத்திலிருப்பினும் அவர்களுக்கான சேவையினை மகளிர் அபிவிருத்தி நிலையம் தொட்டுச் செல்லும் என்பதனை நெடுந்தீவின் செயற்பாடுகள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.
